இங்கே எதையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. எல்லாவற்றிலும் ஏதோவொரு பாடம் இருக்கத்தான் செய்கிறது. நகரங்களில் நம்முடன் வாழும் ஒரு பறவைதான் புறா. நடைபாதைகள், கூரைகள், பால்கனிகள் என கண்ணில்படும் அனைத்து இடங்களிலும் அவை வசிக்கும்.

இதில் நகைப்புக்குரிய ரகசியம் ஒன்று உள்ளது. ஆம். பறவைகள் உலகில் மிக மோசமாக கூடு கட்டும் பறவைதான் புறா.

சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி போன்று கலை நயத்துடன் உன்னிப்பாக அவை வீடு கட்டுவதில்லை. அல்லது கழுகுகளைப் போன்று பிரமாண்டமாகவோ உறுதியாகவோ கட்டுவதில்லை.

புறாக்கள் வெறுமனே சில சிதறிய குச்சிகளைச் சேகரித்து, தட்டையாக இருக்கும் எந்த இடத்திலும் சும்மா அடுக்கி வைத்துவிட்டு பின்னர், “இதோ கூடு!” என்று கூறுகின்றன.

இந்தக் கூடுகளை சர்வசாதாரணமாக எல்லா இடங்களிலும் நீங்கள் பார்க்கலாம். ஓடாத ஒரு சீலிங் ஃபேன், ஒளிரும் சிக்னல் லைட், பயன்படுத்தாத நூலக அலமாரி, கட்டிட இடைவெளிகள்.. என எல்லா இடங்களிலும் பார்க்கலாம்.

வாழ்க்கை குறித்து மனிதன் கருதும் தர்க்கவியலுக்கு முன் சவால் விடுவது போன்றும், மனித முயற்சிகளுக்கு முன்னால் சிரிப்பது போன்றும் இந்த புறாக் கூடுகள் காட்சி தருகின்றன.

புறக்களுக்கு என்ன தேவை? முட்டைகள் உருண்டு செல்வதைத் தடுக்க ஒரு குறுகிய இடம். தங்களுடைய வசிப்பிடம் என்று சொல்வதற்கு குறியீடாக ஒரு கூடு…அவ்வளவுதான்.

இதனால்தான் புறாக்கூடுகள் நகைப்புக்கு உரியவையாக மாறின.

ஆனால் இவை மனிதனுக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத்தருகின்றன. உயிர் வாழ்வதற்கு எப்போதும் அழகும் முழுமையான வசதி வாய்ப்புகளும் தேவையில்லை என்பதற்கான சான்றுகள்தான் புறாக்கூடுகள்.

முன்னேற்றமும் பரிணாம வளர்ச்சியும் உயிர் வாழ்வதற்கான ஒரு வழியைக் காட்டலாம். ஆனால் ஒருபோதும் அவை நமக்கு பொறியியல் பட்டம் வழங்காது என்பதே உண்மை.

இருப்பதை வைத்து போதுமாக்கிக் கொள்வதில்தான் வாழ்வின் நிம்மதி உள்ளது. பேராசை எப்போதுமே பெருநஷ்டம்தான் என்பதையே இந்தப் புறாக்கூடுகள் நமக்கு உணர்த்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *