இலங்கையின் மிகப்பழமையான பெண்கள் பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் 23.11.2025 மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றன.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
150 ஆவது ஆண்டு நிறைவினைக்குறிக்கும் வகையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் விசேட திருப்பலி பூஜை அருட்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்திலிருந்து பேரணியொன்று பாடசாலை வரையில் நடைபெற்றது.
150 ஆவது ஆண்டினை குறிக்கும் வகையில் 150 வெளிச்சக்கூடுகளை ஏந்தியவாறு ஊர்வலம் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்குபற்றுதலுடன் பாடசாலை வரையில் வருகைதந்தது.
ஆதனை தொடர்ந்து பாடசாலையில் வண்ணத்துப்பூச்சி வடிவிலான அலங்காரத்தில் வெளிச்சக்கூடுகள் அடுக்கப்பட்டதுடன் தேசியக்கொடி மற்றும் பாடசாலை கொடியேற்றப்பட்டு 150 ஆவது கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன்போது புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் தோற்றம் முதல் இன்று வரையில் அதிபராக கடமையாற்றியவர்கள் விபரங்கள் அடங்கிய நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் சுதந்திரப்பறவைகள் மாணவர்கள் என்பதைக்குறிக்கும் வகையில் வண்ணத்துப்பூச்சுகள் பறக்கவிடப்பட்டன.
அத்துடன் பாடசாலையின் உள்ளக விளையாட்டரங்கிற்கான அடிக்கல் நடப்பட்டதுடன் பாடசாலையின் பல்வேறு வேலைத்திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து ஒன்றுகூடல் மண்டபத்தில் 150 ஆவது ஆண்டுசிறப்பினை குறிக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பழைய மாணவர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.













