thenakam.live

Daily News

Advertisement

கட்டுநாயக்கவில் 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகை ஒன்று இன்று (06) கைப்பற்றப்பட்டுள்ளது. 

இன்று காலை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ‘பசுமை வழி’ ஊடாக தப்பிச் செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டு பயணிகளுடன் இந்த போதைப்பொருள் தொகையை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு ஆணுமாவர். 27 வயதான ஆண் மும்பையில் உள்ள தொலைபேசி பரிமாற்ற நிலையமொன்றில் பணிபுரிபவர் என்றும், 25 மற்றும் 31 வயதுடைய மற்றைய இரு பெண்களும் மும்பையில் பணிபுரியும் பாடசாலை ஆசிரியைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் அந்த நபரின் மனைவி எனவும் மற்றைய பெண் அவரது சகோதரி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பேங்கொக் சுற்றுலாவுக்கான வாய்ப்பு பெற்றுத் தருவதாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உறுதியளித்து, இந்த போதைப்பொருள் தொகையை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளமை சுங்க அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இவர்கள் இன்று காலை 11.07 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்கள் கொண்டு வந்த 3 பயணப் பொதிகளில் 1 கிலோ 100 கிராம் எடை கொண்ட 48 பொதிகளில், மொத்தம் 50 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட அதிகளவு போதைப்பொருள் தொகையாக, கடந்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்தில் பிரித்தானிய விமான பணிப்பெண் ஒருவரால் கொண்டுவரப்பட்ட 46 கிலோகிராம் ‘குஷ்’ போதைப்பொருள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *