thenakam.live

Daily News

Advertisement

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள விவகாரத்தில் தீவிரமடையும் விசாரணை

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளித் தரப்பினரின் ஊடுருவலுக்கு உள்ளானமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த உத்தியோகபூர்வ இணையத்தளம் பல சந்தர்ப்பங்களில் வெளித் தரப்பினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றமை அவதானிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தப் பிரச்சினையைச் சீர்செய்வதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலைப் பிரிவு மற்றும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் ஆகியவற்றின் ஊடாகத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கிடையில், இணையத்தளத்தில் உள்ள அரச இலச்சினையில் தெளிவற்ற தன்மை காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது. 

இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சின் செயலாளர் கடந்த 09 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். 

இந்த முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மட்டத்திலும் உள் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *