thenakam.live

Daily News

Advertisement

கல்விச் சீர்திருத்தத்தை அரசியல் பிரச்சினையாக மாற்றாதீர்கள்

கல்வியை வெறும் அரசியல் பிரச்சினையாக மாற்றாமல், தேசத்தின் எதிர்காலம் குறித்த தேசிய பொறுப்பாகக் கருதி, நேர்மறையான அணுகுமுறையுடன் இந்தச் சீர்திருத்தச் செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தச் சங்கம், ஆக்கபூர்வமான விமர்சனங்கள், யோசனைகள் மற்றும் தொழில்சார் பங்களிப்பு மூலம் இந்தச் சீர்திருத்தச் செயல்முறையை வலுப்படுத்தத் தமது சங்கம் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பப்படும் பின்னணியில், இது குறித்து மக்கள் தேவையற்ற அச்சத்தையோ அல்லது சந்தேகத்தையோ கொள்ளத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தச் சீர்திருத்தச் செயல்முறைக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளைப் பகுப்பாய்வு செய்யும் போது, அவற்றில் கணிசமானவை தொழில்சார் அல்லது விஞ்ஞான ரீதியான காரணங்களின் அடிப்படையில் அல்லாமல், வெறும் அரசியல் நோக்கங்கள் மற்றும் குறுகிய காலப் பிரபலத்தை இலக்காகக் கொண்ட அணுகுமுறைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளமை புலப்படுவதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அதற்கமைய, இவ்வாறானதொரு போக்கு கல்விக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறு கல்விச் சீர்திருத்தங்களை அரசியல் போர்க்களமாக மாற்றுவதன் மூலம் அநீதி இழைக்கப்படுவது கட்சிகளுக்கு அல்ல, மாறாக நாட்டின் பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்குமே என்பதை அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் முழுமையாகப் பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் நாட்டின் நீண்டகால அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்வி முறைமைகளுக்கு அமைய, கலைத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை எட்டு வருடங்களுக்கு ஒருமுறையேனும் புதுப்பிப்பது அத்தியாவசியமான பணியாகக் கருதப்படுவதாகவும் அச்சங்கம் இங்கு சுட்டிக்காட்டியுள்ளது. 

விஞ்ஞான முன்னேற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள், தொழில் சந்தையின் தேவைகள் மற்றும் சமூக சவால்கள் மிக வேகமாக மாறிவரும் ஒரு யுகத்தில், பல தசாப்தங்களாகப் பழைய கலைத்திட்டங்களைப் பேணுவது, பிள்ளைகளுக்கு எதிர்காலத்திற்குப் பொருத்தமான அறிவு, மனப்பாங்கு மற்றும் திறன்களை வழங்குவதில் பாரிய தடையாகி உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் சூழலில், பத்து வருடங்களுக்கும் மேலாகக் கல்வி கலைத்திட்ட முறைமை போதுமான அளவு புதுப்பிக்கப்படாமை, இன்று பல கடுமையான சிக்கல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளதுடன், பிள்ளைகளின் தர்க்கரீதியான சிந்தனை, ஆக்கபூர்வமான தன்மை, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் மற்றும் திறன் மேம்பாட்டில் உள்ள பலவீனங்கள் இதற்கு முக்கிய காரணிகளாகக் குறிப்பிடலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறான பின்னணியில், ஆரம்பிக்கப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தச் செயல்முறையானது, மேலும் மேம்படுத்தப்பட வேண்டிய மற்றும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு செயல்முறையாக இருந்தாலும், அதனை முற்றாக நிராகரிக்கவோ அல்லது இடைநிறுத்தவோ கூடாது என்றும், மாறாக தொழில்சார் கருத்துக்கள் மற்றும் துறைசார் அனுபவங்களை இணைத்துக்கொண்டு ஒரு இயங்கியல் செயல்முறையாக முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டியது தேசிய பொறுப்பாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *