மலையக மக்களின் உரிமைப் போராட்டங்களின்போது உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் ‘மலையக தியாகிகள் தினம்’ இன்று சனிக்கிழமை கொட்டகலை, கொமர்ஷல் தடாகப் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
‘பிடிதளராதே’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகர்ராஜ் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மலையகத் தமிழ் மக்களுக்குரிய தொழில்சார் உரிமைகள், காணி உரிமை, மொழி உரிமை, அரசியல் உரிமை மற்றும் பொருளாதார உரிமை உள்ளிட்ட விடயங்களுக்கான போராட்டங்களின்போது உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இதன்போது, மாணவிகளின் நடன நிகழ்வுகளும், யோகேஸ், ஸ்ரீ பிரபாத் ஜி ஆகியோரின் மலையக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான சொல்லிசைப் பாடல்களும் இடம்பெற்றதுடன், அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் உரைகளும் இடம்பெற்றன.
இங்கு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகர்ராஜ் கருத்துத் தெரிவிக்கையில்,
“தியாகிகள் தினம் என்பது சிறுகச் சிறுக உருவெடுத்து, இன்று மலையகம் எங்கும் பேசப்படும் ஒரு தினமாக மாறியுள்ளது. மலையக உரிமைப் போராட்டங்களில் 1940 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை உயிர்நீத்தவர்களின் பட்டியலை எழுதியவர் கூட ஒரு தொழிற்சங்கவாதி என்பதுதான் மலையகத்தின் வரலாறு.
1980 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் இது போன்ற உரிமைகளுக்காகப் போராடி பலரை இழந்திருக்கிறோம். அவர்கள் எத்தனை போராட்டங்களில் கலந்துகொண்டார்கள் என்பது பற்றி எழுதப்பட வேண்டிய ஆய்வு ரீதியான தேவை இருக்கிறது. நம் மத்தியில் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இதனைச் செய்ய வேண்டும்.
இதுவரை கிடைக்கப்பெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் 25 தியாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் (ஜெயமணி, ஜோசப் போன்றவர்களோடு). இவர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் நூலுருப் பெறவில்லை. இந்த 25 தியாகிகளும் உயிரிழந்த அந்தந்த ஊர்களில், இது போன்ற ஒரு நினைவேந்தல் நிகழ்வு நடக்குமாக இருந்தால் அது எப்படி இருக்கும் என நான் எண்ணிப்பார்த்தேன்.
எனவே, ஒட்டுமொத்த மலையகமும் நினைத்துப் பார்க்கவேண்டிய, நன்றி கூறவேண்டிய இவர்களை, அந்தந்த ஊர்களில் நினைவுகூரும் நாளாக அடுத்த வருடத்தில் மாற்றியமைக்க வேண்டும் எனும் திடசங்கற்பத்தை நாம் அனைவரும் இந்த நாளில் எடுத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், அரசியல் செயற்பாட்டாளர் ராஜாராம் அவர்களின் முன்னெடுப்பில் நுவரெலியா நகர மத்தியில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு 24 தியாகிகளின் பெயர்கள் பதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தூபி அமைக்கப்பட்டு இன்றோடு 3 வருடங்கள் நிறைவடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த மலையக தியாகிகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 2020 ஜனவரியில் மஸ்கெலியாவிலும், 2021 இல் பத்தனையிலும், 2023 மற்றும் 2024, 2026 ஆம் ஆண்டுகளில் கொட்டகலையிலும் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


























Leave a Reply