thenakam.live

Daily News

Advertisement

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். 

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் மூன்றாவது அமர்வு, மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் “போதைப்பொருள் அற்ற நாடு – மகிழ்ச்சியான நாளை” என்ற தொனிப்பொருளின் கீழ் “ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் அரசாங்கம், பாதுகாப்புப் பிரிவுகள், சிவில் அமைப்புகள் மற்றும் அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்து, ஒரு தேசிய முன்னணியாக இது செயல்படுகிறது. 

போதைப்பொருள் தொடர்பாக தற்போது இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் புனர்வாழ்வு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். 

2025.01.01 முதல் 2026.01.05 வரையிலான காலப்பகுதியில், 1,821.174kg ஹெரோயின், 3,865.710kg ஐஸ், 17,189.377kg கஞ்சா, 38.958kg கோக்கேய்ன் மற்றும் 4,049,569 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 

கடந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உடனடியாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை வகுப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தினார். 

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

போதைக்கு அடிமையானவர்களின் சமூகத் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

இந்த தேசிய வேலைத்திட்டத்தை பரவலாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையில் செயற்படும் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

மேலும், கிராமத்திற்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி, மதத் தலைவர்களின் பங்கேற்புடன் பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *