thenakam.live

Daily News

Advertisement

அக்கரைப்பற்று வைத்தியர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அரச வைத்தியசாலைகளில் கடமையில் இருந்து கொண்டு, ‘பணிப் புறக்கணிப்பு’ எனும் பெயரில் நேற்று முன்தினத்திலிருந்து மூன்று நாட்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்க மறுத்து வரும் வைத்தியர்களுக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தலைமையில், ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக்,  இம்தியாஸ், பௌசான், மனாப் ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக, சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, கல்முனைப் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் கீழுள்ள வைத்தியசாலைகளில் – மூன்று நாட்களாக, வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக ஆயிரக் கணக்கான ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய மழைக்காலத்தில் கணிசமான மக்கள் நோயுற்ற நிலையில் – அரச வைத்தியசாலைகளை நாடிச் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கு சிகிச்சை வழங்க வைத்தியர்கள் மறுக்கின்றனர்.

இதிலுள்ள மனசாட்சி அற்ற விடயம் என்னவென்றால், பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் அனைத்து வைத்தியர்களும், அந்த நாட்களில் கடமையில் இருந்ததாகக் குறிப்பிட்டு, அதற்குரிய சம்பளத்தைப் பெறுகின்றனர்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டுகள் இருந்தால், அதனை சுகாதாரத் திணைக்களம் அல்லது சுகாதார அமைச்சு அல்லது வேறு தொடர்பான நிறுவனங்களில் முறையிட்டு, தீர்வைப் பெறுவதுதான் பொருத்தமான வழியாகும்.

அதை விட்டுவிட்டு, பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு சிகிச்சை வழங்க மறுப்பது கொடுஞ் செயலாகும். இதன் மூலம் இவர்கள் – மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தியுள்ளனர். மறுபுறமாக,  இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் வைத்தியர்கள், பின்னேர வேளைகளில் அவர்களின் தனியார் வைத்திய நிலையங்களில் மக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வைத்தியம் செய்கின்றனர்.

எனவே, இந்த கருணையற்ற வைத்தியர்கள் அனைவரும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காகவே, அவர்களுக்கு எதிராக இன்று பொலிஸ் நிலையத்தில் நாம் முறைப்பாடு செய்துள்ளோம் என முறைப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *