thenakam.live

Daily News

Advertisement

இனி வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் – டிரம்ப் அறிவிப்பு

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க நேரப்படி தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதியின் ‘நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்’ போதே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். 

தனது வழிகாட்டலின் கீழ், வெனிசுலா தலைநகரில் இரவு முதல் காலை வரை வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழியாக “அசாதாரணமான இராணுவ நடவடிக்கை” முன்னெடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். 

பாதுகாப்பான மற்றும் முறையான அதிகாரப் பரிமாற்றம் இடம்பெறும் வரை, வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் வெனிசுலா மக்கள் பாதுகாப்பாகவும் வளமாகவும் மாறுவார்கள் என்றும், அமெரிக்காவில் வசிக்கும் வெனிசுலா மக்கள் இதனால் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மதுரோவுக்கு நேர்ந்த கதி தமக்கும் ஏற்படும் என்பதை வெனிசுலாவின் ஏனைய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். 

மதுரோ ஒரு சட்டவிரோத சர்வாதிகாரி என்றும், அமெரிக்காவிற்குள் பெருமளவிலான போதைப்பொருட்களைக் கடத்தியதற்கு அவரே பொறுப்பு என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார். 

மதுரோவும் அவரது மனைவியும் தற்போது நியூயோர்க் நோக்கிச் செல்லும் கப்பல் ஒன்றில் இருப்பதாகவும், அங்கு சென்றடைந்ததும் அமெரிக்காவிற்கு எதிரான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்காக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். 

வெனிசுலாவிலிருந்து வரும் போதைப்பொருட்களில் 97 சதவீதமானவற்றை அமெரிக்கா கடல்வழியாகக் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிட்ட டிரம்ப், தேவைப்பட்டால் வெனிசுலா மீது இரண்டாவது மற்றும் அதைவிடப் பாரிய தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *